டிரெண்டிங்

இரட்டை இலை சின்னம்.. இதுவரை நடந்தவை

இரட்டை இலை சின்னம்.. இதுவரை நடந்தவை

Rasus

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது பற்றி அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்ன விவகாரம் எங்கே தொடங்கியது? அதில் இதுவரை நடந்தவை என்ன என்பதைப் பார்பபோம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி முறைப்படி சசிகலா பொறுப்பேற்றார். அதன்பிறகு அவருக்கு வந்த எதிர்ப்புத்தான் இரட்டை இலைச் சின்ன விவகாரத்திற்கு ஆரம்ப வித்திட்டது.

ஜனவரி 7: சசிகலா தேர்வு அதிமுக சட்டவிதிகளுக்கு புறம்பானது என்று கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேசி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.

பிப்ரவரி 7: அதிமுக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியுமாக அதிமுக இரண்டானது.

மார்ச் 12: ஆர்கேநகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.

மார்ச் 16: ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் அதிமுக நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வெற்றி பெறும் அணியிடம் இரட்டை இலைச் சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தா‌ர்.

மார்ச் 23: அஇஅதிமுக பெயர், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

ஏப்ரல் 9: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஏப்ரல் 19: டிடிவி தினகரனை கட்சியில் இருந்த ஒதுக்கி வைப்பதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

ஏப்ரல் 26: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

ஜூன் 2: டிடிவி தினகரன் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆகஸ்டு 17: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்

ஆகஸ்டு 21: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன.

ஆகஸ்டு 29: இரட்டை இலை தொடர்பாக தங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு மனு அளித்தது.

செப்டம்பர் 12: அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் இரட்டை இலைச்சின்னத்தை மீட்பது முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட‌து.

செப்டம்பர் 14: இரட்டை இலைச் சின்ன வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இரு அணிகள் தரப்பில் பிரமாண பத்திரங்கள், ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுவருவதோடு, அவகாசம் கேட்பதாக தேர்தல் ஆணையம் பதில் அளித்திருந்தது.

செப்டம்பர் 15: இரட்டை இலைச்சின்னம் உள்ளிட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

செப்டம்பர் 15: இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக அக்டோபர் 31-க்குள் தேர்தல் ஆணையம் முடிவெ‌டுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.