அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நேற்று தனித்தனியே இரண்டாம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் இன்று அதிகாலை வரை 9 மணி நேரத்திற்கும் மேலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துடன் மாறி மாறி ஆலோசனை நடத்தினர்.
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நேற்று தனித்தனியே இரண்டாம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துடன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி,டி.பிரபாகர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதே போல, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, காமராஜ் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன்பிறகு, இரவு 7.45 மணியளவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். சுமார் முக்கால் மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. அதன்பின்னர், 8.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்த அமைச்சர்கள் குழுவினர் துணை முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததாகத் தெரிகிறது. இதனால் நள்ளிரவை கடந்தும், அதிகாலை 3 மணி வரை நான்கு முறைக்கு மேலாக, இருதரப்பினருடனான பேச்சுவார்த்தை மாறிமாறி நடைபெற்றது.
அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில், தனக்கு முழு அதிகாரம் தர வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த நிபந்தனையால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. வழிகாட்டுதல் குழு அமைத்தால் மட்டுமே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்றும் அந்த வழிகாட்டுக்குழுவில் யாரெல்லாம் இருப்பார்கள் என்பதை அறிவித்தலும் அவசியம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.
இரு அணிகள் இணைந்த போது, ஈ.பி.எஸ் தரப்பு உறுதியளித்தவற்றையும், வழிகாட்டுதல் குழுவை அமைக்கவேண்டும் என்பதையும் ஓ.பி.எஸ். வலியுறுத்திவருவதால், திட்டமிட்டப்படி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே சென்னையில் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும். மீண்டும் அதிமுக ஆட்சி வருவதற்கான ஆக்கப்பூர்வ பணி நடக்கிறது என தெரிவித்தார்