அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 எம்.பி.க்கள் மாநிலங்களவை செல்ல உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் வெற்றி கண்டது. மக்களவை தேர்தல் பரபரப்பு ஓய்ந்த நிலையில், தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தமிழகத்திலிருந்து யார் யார்..?மாநிலங்களவை எம்.பி.க்களாக செல்ல உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி.க்களான மைத்ரேயன், லக்ஷ்மணன், ரத்தினவேல், அர்ஜூனன், திமுக மாநிலங்களவை எம்.பியான கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி.யான டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜுலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
மாநிலங்களவை எம்.பியாக தேர்வாக தமிழகத்தில் 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அப்படிப் பார்த்தால் அதிமுகவால் 3 எம்.பி.க்களை மட்டுமே மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும். கடந்த முறை அதிமுக சார்பில் 4 பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக சென்ற நிலையில் தற்போது 3 பேர் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல திமுக எம்எல்ஏக்களின் பலம் அதிகரித்துள்ளதால், அக்கட்சியும் மூன்று எம்.பி.க்களை மாநிலங்களவை அனுப்ப உள்ளது.
இதனிடையே மக்களவை தேர்தல் கூட்டணி உறுதி செய்தபோதே, மதிமுகவிற்கு திமுக ஒரு மாநிலங்களவை எம்.பி தருவதாக உறுதி அளித்துவிட்டது. அதன்படி மதிமுக பொதுச் செயலாளார் வைகோ மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. இதேபோல அதிமுகவும், பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி.யை வழங்குவதாக உறுதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.