தனக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு தேர்தல் நேரத்திலிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனிப்பட்ட காவலரை நியமிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருமாவளவன் பயணிக்கும் இடங்களில், ஒரு டி.எஸ்.பி. மற்றும் 10 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவதாகவும், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது ஒரு டி.எஸ்.பி மற்றும் நான்கு இன்ஸ்பெக்டர், காவலர்கள் பாதுகாப்பில் இருப்பதாகவும், இதே போன்று அவர் தங்கும் ஊர்களில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த மனுதாரர், பொதுவான பாதுகாப்பை தவிர 24 மணி நேரமும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை யாரும் உரிமை கோர முடியாது என்றும் பாதுகாப்பு கோரும் மனுக்களை டிஜிபி அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு ஆய்வு குழு தான் முடிவெடுக்கும் என நீதிபதி தெரிவித்தார். பின்னர் திருமாவளவனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவனுக்கு வழங்கும் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு அவகாசம் கோரியது. இதையடுத்து இந்த வழக்கை ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.