டிரெண்டிங்

எடப்பாடி அணிக்கு திரும்புகிறாரா நடிகை விந்தியா?

webteam

விந்தியா முதன்முறையாக இப்போது மனம்திறந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். 


அதிமுகவின் பீரங்கி பேச்சாளராக வலம் வந்தவர் நடிகை விந்தியா. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவர் அமைதியானார். அரசியல் செயல்பாட்டில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டார். அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து போன போதுகூட அவர் எந்த அணி பக்கமும் சேரவில்லை. ஜெயலலிதா மட்டுமே அதிமுக என கூறிவந்த அவர் முதன்முறையாக மெளனம் களைந்து முதல்வர் எடிப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். 

அந்தக் கடிதத்தில்,“முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே என்று கேட்கத் துடிக்கும் நேர்மையான தொண்டர்களில் நானும் ஒருத்தி..எடப்பாடியாருக்கு இத்தனை பெரிய இடமா என்று ஏளனப்பார்வை பார்த்தவர்களில் நானும் ஒருத்தி..அம்மாவைத் தவிர வேறொன்றும் அறியாத விசுவாசிகளில் நானும் ஒருத்தி.இரட்டை இலையே இதயத்துடிப்பாக எண்ணிய அ.தி.மு.க பக்தைகளில் நானும் ஒருத்தி..கழகம் இரண்டுபட்டதால் கலங்கி நின்ற கணக்கற்ற தொண்டர்களில் நானும் ஒருத்தி.. கூவத்தூர் கூத்துகளால் மனம் நொந்த மக்களில் நானும் ஒருத்தி..

இப்படி எத்தனையோ எதிர்மறை கருத்துகளால் மனம் வெறுத்தவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தாலும், இன்று என் மனம் என்னை அறியாமல் உங்களைப் பாராட்டி எழுதச் சொல்கிறது.. அம்மாவின் பிள்ளைகள் இனி அநாதை பிள்ளைகள் என எதிரிகள் ஏளனம் செய்யும்போது தாயை இழுந்து தவிக்கும் எங்களுக்கு தமையனாய் வந்தாய், அம்மாவின் ஆட்சி காத்து தைரியம் தந்தாய்..

நீங்கள் ஏறி வந்த படிக்கட்டுகள், தாண்டி வந்த தடைகற்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்..ஆனால், நாளைக்கு கலைத்துவிடுவோம் என்று வேளைக்கு அறிக்கைவிடும் கழக எதிரிகளிடமிருந்து இயக்கத்தையும் இரட்டை இலையையும் கட்டிக்காத்த பெருமை உங்களுக்குண்டு.” என்று அவர் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

இந்தக் கடிதத்தால் இவர் எடிப்பாடி அணியில் விரைவில் சேரலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.