ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெற்றது. விஷாலின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நடிகர் விஷால் உள்ளிட்ட 54 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அளித்துள்ள விளக்கத்தில், விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் அலுவலகம் முன்பு விஷால் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பேசிய விஷால், எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமே இல்லை என்றும் தன்னை முன்மொழிந்த நபர்கள் அதிமுகவினரால் மிரட்டப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் கூறினார். தனது மனு மீதான பரிசீலனை இரண்டரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக விஷால் தெரிவித்தார்.