நடிகர் ஸ்ரீ தனது பழைய தோற்றத்துடன் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அவரது புதிய புகைப்படம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அவரின் திரும்பும் முயற்சியை பாராட்டும் கருத்துகளை உருவாக்கியுள்ளது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீ. முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பாலும், அப்பாவித்தனமான முகத்தாலும் ரசிகர்களை கவர்ந்த இவர், மிஷ்கின் இயக்கத்தில் உருவான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாநகரம், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவான இறுகப்பற்று போன்ற பல்வேறு தரமான படங்களில் நடித்திருந்தார். இதனால், தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை நட்சத்திரமாக ஸ்ரீ வருவார் என்று, விமர்சகர்களும், ரசிகர்களும் தொடர்ந்து கூறி வந்தனர்.
ஆனால், இந்த கருத்தை தூள் தூளாக மாற்றும் வகையில், கடந்த 2025-ஆம் ஆண்டு அன்று ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்தில், உடலில் உள்ள எலும்புகள் வெளிப்படையாக தெரியும் வகையில், நீண்ட முடி மற்றும் தாடியுடன், பார்ப்பதற்கு வேறொரு நபராக ஸ்ரீ மாறியிருந்தார். மேலும், ஆபாசமான சைகைகளுடன் சில வீடியோக்களையும் வெளியிட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், நடிகர் ஸ்ரீ-க்கு உதவுங்கள் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்கள் இருவரும், ரசிகர்களின் அந்த கோரிக்கையை ஏற்று, சில உதவிகளை செய்ததாகவும் அப்போது கூறப்பட்டது. இப்படியான சூழ்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஸ்ரீ புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மீண்டும் பழையபடி அவர் மாறியிருப்பதை பார்த்த ரசிகர்கள், மீண்டும் கம்பேக் கொடுத்திருப்பதாக, மகிழ்ச்சியுடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.