தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை இன்று சந்திக்கவிருப்பதாக அறிவித்திருந்த ரஜினி, காலை 9 மணி அளவில் சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டார். சுமார் 10.30 மணி அளவில் அவர் தூத்துக்குடி சென்றார். விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களை சந்தித்தார். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். காயமடைந்தோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை வழங்கி ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, “ துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்களை சந்திக்கும்போது மனதிற்கு பாராமாக இருந்தது. தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம், போலீஸ் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது எல்லாம் பொதுமக்கள் அல்ல. சமூக விரோதிகள் மற்றும் விஷக் கிருமிகள். அவர்கள்தான் இந்த வேலையை செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். தற்போதைய புனிதமான போராட்டம் ரத்தக் கறையுடன் முடிவடைந்துள்ளது. தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துள்ளனர். ஜெயலலிதா சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருந்தார். தற்போதைய அரசு அதனைப் பின்பற்ற வேண்டும். சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு போலீசாரை மட்டும் குற்றம் கூறுவது ஏற்புடையதல்ல. மக்களுக்கு பாதுகாப்பு தருவதும் அவர்கள்தான்” என தெரிவித்தார்.