திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் இரவு 7.30 மணிக்கு சந்திக்க உள்ளார்.
நீண்ட காலமாகவே ரஜினி அரசியலுக்கு வருவாரா..? மாட்டாரா..? என்ற விவாதம் தமிழகத்தில் மேலோங்கி காணப்பட்டது. இதற்கு கடந்த 31-ஆம் தேதி ரஜினி முற்றுப்புள்ளி வைத்தார். சென்னையில் தனக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார். மேலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனிக்கட்சி தொடங்கி தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். பிரத்யேக இணையதளத்தையும் ரஜினி தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டில் நல்ல ஒரு அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய இரண்டையும் www.rajinimadram.org என்ற வலைதள பக்கத்தில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை ரஜினி சந்திக்க உள்ளதாக இன்று காலை தகவல் வெளியாகி இருந்தது. அதனையடுத்து, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்திக்க இரவு 7.30 மணிக்கு ரஜினிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.