தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசியல் சூழல் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் நாசர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் சக்திதேவி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாசர், தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசியல் சூழல் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி நடிகர்கள் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம்.
ஆனால், உணர்ச்சி பொங்கிய பேச்சு, அறிக்கைகளை கண்டு பொதுமக்கள் மயங்காமல் தங்களுக்கான தலைமையை மக்களே ஏற்படுத்த வேண்டும். தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் நல்ல திட்டங்களை ஏற்படுத்துபவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். நானே கட்சியை துவக்கினாலும் இதே நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.