ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க வேண்டும் என ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தவும் குணமாக்கவும் தமிழக அரசே பல்வேறு இடங்களில் நிலவேம்பு குடிநீரை அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு சமூக அமைப்புகள், நடிகர்களின் ரசிகர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் அளித்து வருகின்றனர்.
இதனிடையே நிலவேம்பு குடிநீரை காய்ச்சல் இல்லாதவர்கள் குடித்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று ஒருசிலர் சமூக இணையதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால் நிலவேம்பு குடிநீர் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க வேண்டும் என ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்” என தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரிய காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.