டிரெண்டிங்

"வாக்கில்லாமல் வாக்களிக்க சிவகார்த்திகேயனுக்கு அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை" - சத்யபிரதா சாஹூ

"வாக்கில்லாமல் வாக்களிக்க சிவகார்த்திகேயனுக்கு அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை" - சத்யபிரதா சாஹூ

Rasus

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு இல்லாமல் வாக்களித்த விவகாரத்தில், அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன், வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயன் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு இருந்தது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என்ற தகவல் வெளியானது. இதனிடையே தனது வாக்கினை பதிவு செய்துவிட்டதாக சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் எப்படி வாக்களித்தார் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் அதிகாரிகள், ''சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் பாகம் 303 வாக்காளர் பட்டியல் வரிசை எண் 703ல் அவரின் பெயர் எழுதப்பட்டு சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார். நீக்கப்பட்ட பெயர் பட்டியலில், சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால் இந்தச் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில்  நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு இல்லாமல் வாக்களித்த விவகாரத்தில், அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் தவிர ஒருசிலரும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் விடுபட்டிருந்தது. அத்தகைய நபர்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில், சிவகார்த்திகேயனுக்கு மட்டும் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.