அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலகத்தில் முதல்வருடன் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எனக் கூறப்படும் 9 பேர் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வன், அதிமுக ஒரே அணியாகத்தான் உள்ளது எங்களுக்குள் பிரிவு ஏதும் இல்லை. பொதுச்செயலாளர் என்ற முறையில் டிடிவி தினகரனைச் சந்தித்தோம். ஜெயகுமார் நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும். கட்சி தொடர்பான நடவடிக்கைகளை சசிகலா, தினகரனால் மட்டுமே எடுக்க முடியும். ஓபிஎஸ் போல் ஆட்சியையும், கட்சியையும் கவிழ விடமாட்டோம் எனத் தெரிவித்தார்.
டிடிவி.தினகரன் உள்ளிட்டோரை விலக்கி வைத்த முடிவில் உறுதியாக உள்ளோம். தினகரனை கட்சியை சார்ந்த யாரும் சந்திக்க மாட்டார்கள். சசிகலா தரப்புடன் எவ்வித தொடர்பும் இல்லை’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் பேசியுள்ள தங்கத் தமிழ்ச் செல்வன், கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனக் கூறியுள்ளார்.