2ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள ஆ.ராசா, அவ்வழக்கின் பின்னணி குறித்து எழுதிய புத்தகம் வரும் 20-ம் தேதி டெல்லியில் வெளியிடப்படுகிறது.
ஆங்கிலத்தில் வெளியாகும் புத்தகத்தில், 2ஜி வழக்கு தொடர்பான பல முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆ.ராசா புத்தகம் எழுதுவதாக வெளியான தகவல் பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. காரணம், அலைக்கற்றை வழக்கு தனி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு நிறுவனங்களால் நிகழ்த்தப்பட்டவை என திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதியிருந்த கடிதத்தில் ராசா தெரிவித்திருந்தார்.
மாநிலக் கட்சியான திமுக, இந்திய அரசியலில் வலுவான இடத்திலிருப்பதை விரும்பாத சில ஆதிக்க சக்திகளும், 2ஜி வழக்கின் பின்னணியில் இருந்ததாகவும் அக்கடிதத்தில் ராசா குறிப்பிட்டிருந்தார். தொலைத்தொடர்புத் துறையில் சில நிறுவனங்கள் ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதாகவும், அலைவரிசை ஒதுக்கீடு மூலம் அந்தக் கூட்டு வல்லாண்மையை தான் உடைத்ததாகவும் ராசா அக்கடிதத்தில் கூறியிருந்தார். அந்த வல்லாண்மை எது? அதன் பின்னணியில் இருப்பது யார் என்பது போன்ற கேள்விகளுக்கு ராசாவின் புத்தகம் பதிலளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, புத்தக வெளியீட்டையொட்டி ஜனவரி 19ம் தேதி இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.