செய்தியாளர் - ராஜ்குமார். ர
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டம் ஓரமாஞ்சியில் உள்ள பிளாக் சௌக் பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடைக்குள், நேற்று மாலை திடீரென ஒரு பெண் குரங்கு புகுந்ததாகத் சொல்லப்படுகிறது. கடைக்குள் குரங்கு வந்ததைப் பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அதனை வெளியேற்ற முயன்றுள்ளனர். ஆனால், குரங்கு அங்கிருந்து வெளியே செல்லாமல், கடைக்குள் இருந்த மதுபாட்டில் ஒன்றை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்தப் பாட்டிலில் இருந்த மதுவை குரங்கு குடித்துள்ளது. மது அருந்திய சிறிது நேரத்திலேயே, கடைக்குள்ளேயே படுத்து உறங்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த வித்தியாசமான காட்சியைப் பார்ப்பதற்காக அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டுள்ளனர். குரங்கு கடைக்குள் படுத்துத் தூங்கும் காட்சிகளை அவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
குரங்கு தூங்கிக் கொண்டிருந்ததால் பிரச்னை முடிந்துவிட்டது என்று நினைத்தபோதுதான் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. சிறிது நேரத்துக்குப் பிறகு குரங்கு எழுந்த நிலையில், கடைக்குள் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், அதனை வெளியேற்ற முயன்ற கடை ஊழியர் ஒருவரைக் கடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், கடை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வனவிலங்கு மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கிடைத்ததும், அருகில் உள்ள பிர்சா முண்டா உயிரியல் பூங்காவின் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், குரங்கைப் பாதுகாப்பாகப் பிடித்து அங்கிருந்து அழைத்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுக்கடைக்குள் புகுந்த குரங்கு ஒன்று மதுபாட்டிலை எடுத்து குடித்துவிட்டு அங்கேயே தூங்கியதாகக் கூறப்படும் சம்பவம், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.