தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி பணிகளில் பெரும்பாலும் ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள சுக்கமநாயக்கன்பட்டிக்கு தேர்தல் பணிக்காக வந்தார் அதிகாரி செந்தில். இவருக்கு வயது சுமார் 50. இவர் அதே மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கிருந்து நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பணிக்காக சுக்கமநாயக்கன்பட்டிக்கு வந்துள்ளார்.தேர்தல் பணிக்காக இன்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்நிலையில் மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.