டிரெண்டிங்

ஜார்க்கண்டில் பலம் குறையும் பாஜக?: தனித்து போட்டியிட லோக் ஜனசக்தி முடிவு

webteam

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23-ஆம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், ஜார்க்கண்ட் தேர்தலில் நாங்கள் போட்டியிட முடிவு செய்துள்ளோம். எங்களது கட்சியான லோக் ஜனசக்தி கட்சி 50 இடங்களில் தனித்து போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி வைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் லோக் ஜனசக்திக்கு அதிக இடங்களை தர பாஜக யோசித்ததாக தெரிகிறது. இதனால் தனித்து போட்டியிடும் முடிவுக்கு லோக் ஜனசக்தி கட்சி முடிவெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

பீகாரில் பாஜகவின் கூட்டணி கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளமும் ஜார்க்கண்டில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. லோக் ஜனசக்தி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி இல்லாதபட்சத்தில் ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜகவின் பலம் குறைந்துள்ளதாகவே தெரிகிறது. ஆனாலும் வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரசார பணிகள் என பாஜக முழு மூச்சுடன் வேலையை தொடங்கியுள்ளது.