டிரெண்டிங்

ஆசை ஆசையாக வளர்க்கப்பட்ட செல்லப்பிராணி.. DJ, Band இசையுடன் பிரியாவிடை கொடுத்த குடும்பம்!

JananiGovindhan

சில உறவுகள் மீது கொண்ட பற்றும், அன்பும் எப்போதும் விலைமதிப்பற்றதாக இருக்கும். அதுவும் செல்லப்பிராணிகளான நாய்கள் மீது கொண்டிருக்கும் பாசத்திற்கும் பந்தத்திற்கும் அளவே இருக்காது.

குறிப்பாக வீட்டில் ஒரு உறுப்பினராக பல காலம் வளர்க்கப்பட்ட நாய்கள் பிரிந்தால் அந்த குடும்பத்தினருக்கு அது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திவிடும். அதனால் மனிதர்கள் இறந்தால் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அவற்றை நாய்களுக்கும் செய்து தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள்.

அப்படியான சம்பவம்தான் ஒடிசா மாநிலத்தில் கடந்த திங்களன்று (ஆக.,8) நடந்திருக்கிறது. கஜபதி மாவட்டத்தின் பரலாகேமுண்டி என்ற பகுதியில் தாங்கள் வளர்த்த அஞ்சலி என்ற நாய் இறக்கவே அதற்கு அந்தக் குடும்பத்தினர் நடத்திய பிரியாவிடை சடங்குகள் காண்போரை ஆச்சர்யத்தில் மூழ்க வைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக துனு கவுடா என்பவரின் குடும்பத்தினரால் அஞ்சலி நாய் செல்லமாக வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. அது கடந்த திங்களன்று இறந்துவிடவே, உரிய மரியாதையை செலுத்தும் வகையில் அலங்கார ஊர்தியில் அஞ்சலி நாயை எடுத்துச் சென்று இறுதி மரியாதை செய்திருக்கிறார்கள்.

இதுபோக பட்டாசுகள் வெடித்து பேண்டு வாத்தியங்கள் வாசித்து, DJ இசைக்கச் செய்து சுடுகாடு வரை கொட்டும் மழையில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அஞ்சலியின் உரிமையாளரான துனு கவுடாவும், அவரது குடும்பத்தினரும் தங்களுடைய சோகத்தை அடக்க முடியாமல் கதறி அழுதிருக்கிறார்கள். துனு கவுடாவின் இந்த செயல் செல்லப்பிராணியான அஞ்சலி நாய் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பை காட்டியிருக்கிறது.

அப்படி என்ன அந்த நாய்க்கும் குடும்பத்தினருக்கும் இருக்கும் பந்தம் என்பதை காணலாம்:

அஞ்சலியின் இறுதி மரியாதையை சிறப்பாக செய்யும் அளவுக்கு துனு கவுடாவும் அவரது குடும்பமும் செல்வந்தர்கள் என நினைத்திட வேண்டாம். ஏனெனில் அவர்கள் சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே ஆவர்.

துனு கவுடாவின் தந்தை மறைந்த பிறகு குடும்பத்தை ஏற்று நடத்த வேண்டிய பணி துனுவிடம் வந்தடைந்திருக்கிறது. அதற்காக பல இடங்களில் பணியாற்றிதான் குடும்பத்தை பராமரித்து வந்திருக்கிறார். அப்படி வேலைக்கு சென்று வந்த சமயத்தில்தான் மறைந்த அந்த நாயை சந்தித்து அதனை தானே வளர்க்க எண்ணி அஞ்சலி என பெயரும் வைத்திருக்கிறார்.

அஞ்சலி தங்களது வீட்டிற்கு வந்த பிறகுதான் துனுவின் பொருளாதார நிலையும் ஏற்றம் கண்டிருக்கிறதாம். அவர்களுக்கென சொந்த வீடும் துனு வாங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அஞ்சலியும் துனுவின் குடும்பத்தினரோடு பிண்ணிப்பிணைந்து போயிருந்திருக்கிறது.

இதனால் எந்த சமரசமும் இல்லாமல் அஞ்சலியை அத்தனை நெருக்கமாக துனுவும் அவர்களது குடும்பத்தினரும் வளர்த்து வந்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில்தான் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அஞ்சலி உயிரிழந்திருக்கிறது.

இதனையடுத்து அஞ்சலியை மஞ்சள் தண்ணீரால் குளிப்பாட்டி அதனை மலர்களால் அலங்கரித்து பாரம்பரிய முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளையும் இறுதி மரியாதையையும் செய்திருக்கிறார்கள். மேலும் இறப்புக்கு பிந்தைய சடங்குகளை செய்யப்போவதாகவும், ஊரையே கூட்டி சமூக விருந்து வைக்கப்போவதாகவும் துனுவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.