திமுக வேட்பாளர் ஒருவர் இதுவரை தனக்கென ஒரு செல்போன்கூட வைத்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ முதலில் கையில் ஒரு செல்போன் இருக்க வேண்டும். ஒருவேளை தவறுதலாக செல்போனை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டால் அன்றைய பொழுதே அவ்வளவுதான். அந்தளவுக்கு செல்போன் என்பது முக்கிய தேவையாகி விட்டது. ஆனால் செல்போன்கூட இல்லாமல் ஒருவர் இருக்கிறார். அதுவும் பிரபல கட்சியின் வேட்பாளராக இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
வருகின்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் மானாமதுரை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கரு.காசிலிங்கம் என்கின்ற இலக்கியதாசன், இதுவரை தன் வாழ்நாளில் தனக்கென ஒரு செல்போன் கூட இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்.
65 வயதான இவர் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களை எளிதில் கவர மற்ற கட்சிகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இவரோ மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கண்டறிந்து தீர்வு காண்பேன் என்கிறார். மேலும் வீடு வீடாக சென்று நேரில் வாக்கு சேகரித்து வருவதாகவும் கூறுகிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் வேறு வழியின்றி தான் கைப்பேசியை வாங்கி உள்ளதாகவும் கூறுகிறார் இலக்கியதாசன். இவரின் எளிமையான அணுகுமுறையும், வாழ்க்கை முறையும் தேர்தல் களத்தில் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி: Photo Courtesy ‘The Hindu'