டிரெண்டிங்

பழனி: 800 கிராம் எடையுடன் 26 வாரத்தில் பிறந்த குழந்தை.. குறைந்த செலவில் காப்பாற்றி சாதனை!

kaleelrahman

பழனியில் 800கிராம் எடையுடன் 26வாரத்தில் பிறந்த குழந்தைக்கு பழனியிலேயே முழு மருத்துவ சிகிச்சையும் அளித்து காப்பாற்றியுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அழகேஷ்வரி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு (26 வாரம்) குறைமாத பிரசவத்தில் 800கிராம் எடையில் ஆண்குழந்தை பிறந்தது. மிகவும் ஆபத்தான நிலையில் பிறந்த குழந்தைக்கு பழனியிலேயே உயர்தர சிகிச்சை அளித்து காப்பாற்றி மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மருத்துவர் தெரிவித்ததாவது.

பழனியை அடுத்துள்ள பெருமாள்புதூர் தனது ஊர் என்றும், குழந்தைகள் நல மருத்துவம் படித்து கோவை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் பழனியில் குறைமாத பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகளின் உயிர் பாதிக்கப்படுவது தெரியவந்தது.

எனவே பழனி பகுதி மக்கள் இதில் இருந்து விடுபட முடிவு செய்து, பழனியில் கிளினிக் ஆரம்பித்தேன். இந்நிலையில், தாராபுரத்தைச் சேர்ந்த மோகன் - அழகேஷ்வரி தம்பதிக்கு கடந்த ஜூலை 31ம்தேதி குறைமாதத்தில் 26வாரமே வளர்ச்சியடைந்த ஆண்குழந்தை பிறந்தது. 820 கிராம் எடை உடைய இந்த குழந்தையை பழனியில் வைத்தே சிகிச்சை அளித்து காப்பாற்ற முடிவு செய்து சிகிச்சை அளித்தோம்.

தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும், இதற்கு முன்பு இதைவிட எடை குறைவான குழந்தைகளை காப்பாற்றி இருந்தாலும் அவை எல்லாம் பெருநகரங்களில் மட்டுமே நடைபெற்றுள்ளது என்றும், தற்போது பழனியில் மிகவும் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு பழனியில் வைத்தே சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ள சம்பவம் இதுவே முதல்முறை என்றும், பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 6 லட்சம் வரை செலவாகும் நிலையில் பழனியில் 2 லட்சம் ரூபாயில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் மருத்துவர் பிரபு தெரிவித்தார்.