டிரெண்டிங்

காரில் கடத்தி வரப்பட்ட 1.60 லட்சம் மதிப்புள்ள 960 மதுபாட்டில்கள் பறிமுதல்...!

kaleelrahman

கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட, 1.60 லட்சம் மதிப்புள்ள 960 போலி மது பாட்டில்களை தருமபுரி மதுவிலக்கு அமல்பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில் இருந்து வெள்ளிச்சந்தை வழியாக தருமபுரிக்கு போலி மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக, காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தருமபுரி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில், மதுவிலக்கு பிரிவினர் வெள்ளிச்சந்தை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் இன்று மதியம், அந்த வழியாக வந்த மாருதி எஸ்டீம் கார் மற்றும் அதற்கு முன்னால் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், துரத்திச் சென்று இருசக்கர வாகனம் மற்றும் காரை ஓட்டி வந்த, இருவரை பிடித்து, காரை சோதனை செய்தனர்.

அப்போது, காரில் 960 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரிடம் விசாரித்த போது, ஒருவர் பாப்பாரப்பட்டியை சேர்ந்த மணி என்பதும், காரை ஓட்டி வந்தவர் பெங்களூர் ஆனைக்கல்லை சேர்ந்த சிராஜ்தீன்கான் என்பதும் தெரியவந்தது. 

தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 960 போலி மதுபாட்டில்களும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.