டிரெண்டிங்

தூங்கி கொண்டிருந்த தாய்.. தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த 9 மாத குழந்தை உயிரிழப்பு

தூங்கி கொண்டிருந்த தாய்.. தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த 9 மாத குழந்தை உயிரிழப்பு

kaleelrahman

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் 9 மாத குழந்தை தண்ணீர் வாளியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் ரூபாகி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபுல் உசேன். இவர் தனது குடும்பத்துடன் கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள சிவராஜ் கார்டன் பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவியும் மூன்று வயதில் பெண் குழந்தையும், சகோலம் என்ற 9 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகாலை எழுந்த கணவன் அபுல் உசேன் வேலைக்காக கிளம்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த மனைவி தூங்கி கொண்டிருந்த நேரத்தில் 9மாத குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பாத்திரம் கழுவ பிடித்து வைத்திருந்த தண்ணீர் பக்கெட்டில் குழந்தை தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

தூக்கத்திலிருந்து எழுந்த தாய் குழந்தையை பல இடங்களில் தேடி உள்ளார். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் பக்கெட்டுக்குள் தலைகுப்புற கிடப்பதைக் கண்டு தன் கணவருக்கு தகவல் சொல்லிவிட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை தானாக பக்கெட்டில் விழுந்து இறந்ததா அல்லது கோபத்தில் குழந்தை கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.