டிரெண்டிங்

ஸ்ரீபெரும்புதூர்: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் கைது

kaleelrahman

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். 


ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையின் பின்புற பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் தங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், சம்பந்தப்பட்ட இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கியிருந்த 5 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ஐந்து பேரும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் உள்ள பிரபல ரவுடியை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து விஷ்வா, பாலச்சந்தர், சந்துரு, மகேஷ், மற்றும் சிவகுமார் ஆகிய 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


மேலும் அவர்களிடம் இருந்து பதினான்கு கக்திகள் ஆறு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் மகாலட்சுமி என்பவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


கைது செய்யப்பட்ட ரவுடிகள் மீது ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் 4 கொலை வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்