வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சின்ன சேலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ரூ.33 லட்சம் அபராதமும் விதித்தது விழுப்புரம் நீதிமன்றம்
1991 மற்றும் 96ஆம் ஆண்டுகளில் சின்னசேலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரமசிவம். பதவியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர்மீது வழக்குத் தொடர்ந்திருந்தனர். விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கு சென்னையிலுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மீண்டும் அங்கிருந்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், இன்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.33 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறைதண்டனை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் 1991 மற்றும் 96ஆம் ஆண்டுகளில் அவர் தனது மகன்கள் பெயரில் வாங்கிய சொத்துகள் முழுவதும் அரசுடைமையாக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.