டிரெண்டிங்

தமிமுன் அன்சாரி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

தமிமுன் அன்சாரி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

webteam

அனுமதி மீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளில்  மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினரான தமிமுன் அன்சாரி, தனது கட்சியின் நிர்வாகி வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக மதுரை சென்ற நிலையில், நேற்று அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தங்கும் அறைக்கு மட்டுமே அனுமதி பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அங்கிருக்கும் கூட்ட அரங்கில் நேற்று காலை செய்தியாளர்களைச் சந்திக்க வந்தபோது, அவருக்கு அங்கிருக்கும் பணியா‌ளர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். 

அதையும் மீறி அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் உள்ளிட்டோர் நேரில் சென்று இதுதொடர்பாக பேசும்போது, பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் மீது தல்லாக்குளம் காவல்துறையினர், அனுமதியின்றி கூட்ட அரங்கைப் பயன்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கூட்ட அரங்கைப் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும் என்பது தனக்கு தெரியாது என தமிமுன் அன்சாரி விளக்கமளித்துள்ளார்.