டிரெண்டிங்

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4பேர் கைது

kaleelrahman

சைபர் குற்றப்பிரிவு உதவியுடன் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.4 லட்சம் மதிப்புள்ள 26 செல்போன்கள், மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


சென்னை, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் தங்ககுமார். இவர் கடந்த 2ஆம் தேதி நொளம்பூர் சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.


இது குறித்து தங்ககுமார் நொளம்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையர் ஜவஹர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆராய்ந்தனர்.


மேலும், அண்ணாநகர் காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவினரின் தொழில்நுட்ப வசதிகள் உதவியுடன் கண்காணித்து, செல்போன் எண்ணின் ஐஎம்இஐ எண்ணை வைத்து செல்போனை பறித்துச் சென்ற அயனம்பாக்கத்தைச் சேர்ந்த பரத், பொன்னரசன், சபரிநாதன், அம்பத்தூரைச் சேர்ந்த ஆகாஷ்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.


அவர்களிடமிருந்து சுமார் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 26 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சென்னை நொளம்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் பறிப்பு மற்றும் இருசக்கர வாகன திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. திருடப்பட்ட செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.