டிரெண்டிங்

எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல், கொலை வழக்குகள் எவ்வளவு? முழு விவரம்

webteam

தமிழகத்தில் தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்களில் 33 விழுக்காடு பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. குறிப்பாக 8 எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதம் முடிடையும் நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள், சொத்து விவரங்கள், கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களில் 68 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. குறிப்பாக 8 எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை முயற்சி வழக்கும், இருவர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கும் நிலுவையில் உள்ளன. 40 திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதும், 23 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதும், 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிலும், குறிப்பாக, 22 திமுக எம்.எல்.ஏ.க்கள், 13 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது மிக தீவிரமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சொத்துகளைப் பொறுத்தவரையில், அதிமுகவில் 76 பேருக்கும், திமுகவில் 74 பேருக்கும், காங்கிரஸில் 5 பேருக்கும், ஒரு சுயேச்சை மற்றும் ஐயூஎம்எல் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் தலா ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்துள்ளது. மொத்தமாக 157 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். நடப்பு பேரவையில் சராசரியாக ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 6 கோடி ரூபாய் சொத்து உள்ளது.

கல்வித் தகுதியை பொறுத்தவரையில், 89 பேர் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்களாக உள்ளனர். 110 பேர் பட்டம் மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி பெற்றுள்ளனர். மூவர் பட்டயம் பெற்றுள்ளனர். நடப்பு பேரவையில் மொத்தம் 17 பெண்கள் உள்ளனர். 50 வயதுக்கு கீழாக 78 பேரும், 51 வயது முதல் 70 வயது வரை 125 பேரும் உள்ளனர்.