திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 3 பேர் மற்றும் 50 கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்திலுள்ள 42 தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த முறை கூடுதலாக 16 இடங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் திரிணாமுல் கட்சிக்கு இணையாக வாக்கு சதவீதத்தையும் பெற்றுள்ளது. தன்வசம் இருந்த 12 இடங்களை திரிணாமுல் இழந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 3 பேர், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ மற்றும் 50 கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். குறிப்பாக 20 பெண் கவுன்சிலர்கள் பாஜகவில் இணந்துள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இணைப்பு தொடர்ந்து நடைபெறும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்ஹியா கூறியுள்ளார். பாஜகவில் சேர்ந்த திரிணாமுல் முன்னாள் தலைவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கீ ஜே’ என முழக்கமிட்டனர்.
மம்தா பானர்ஜியுடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக திரிணாமுல் கட்சியில் இருந்து 2017இல் வெளியே வந்த அக்கட்சியின் எம்.எல்.ஏ முகுள் ராய் தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றது. “2021 சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பிடிக்காது. திரிணாமுல் 143 சட்டசபை தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வியை சந்திக்கும் கட்சியில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள்” என்று கூறினார்.
ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் சரிவை சந்தித்துள்ள, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.