டிரெண்டிங்

ஒரே கட்சியில் இருந்த 3 பேர் எதிரெதிர் அணியில் மோதும் ஓபிஎஸ்ஸின் போடி தொகுதி!

ஒரே கட்சியில் இருந்த 3 பேர் எதிரெதிர் அணியில் மோதும் ஓபிஎஸ்ஸின் போடி தொகுதி!

Veeramani

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் தமிழகத்தின் முக்கிய நட்சத்திர தொகுதியான போடிநாயக்கனூரில் ஒரே கட்சியில் இருந்த மூன்று பேர் தற்போது எதிரெதிர் துருவங்களாக களம் காண்கின்றனர். அவர்கள் மேற்கொண்டு வரும் பரப்புரை வியூகங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் தமிழக துணை முதல்வரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், அமமுக சார்பில் எம்.முத்துசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் பிரேம்சந்தர், மக்கள் நீதி மய்யம் சார்பில் கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பரப்புரை வியூகம் என்று பார்த்தால் போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்று தனி தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்புரையை முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்புகின்றனர். பரப்புரையின் போது தன்னை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் குறித்து ஓபிஎஸ் பேசுவதில்லை. மாறாக, கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத நோட்டு என்றே குறிப்பிடுகிறார். அவரது மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் தந்தைக்காக தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். ஓ.பன்னீர்செல்வம் வெளியூரில் இருந்தாலும் நாள் தவறாமல் யாராவது ஒருவர் அவரது தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமூக தலைவர்களை தனித்தனியே அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனின் பரப்புரையில் ஆடம்பரம் இல்லை, ஆனால் அனல் பறக்கிறது. ஏனென்றால் ஓபிஎஸ்-இன் சொத்து மதிப்பை வைத்து தான் பரப்புரையையே தொடங்குகிறார். கூடவே திமுகவின் தேர்தல் அறிக்கையையும், அந்தப் பகுதியில் 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத திட்டங்களையும் பட்டியலிட்டு, அதனை ஒப்பிட்டு வாக்கு சேகரிக்கிறார். ஜீப்பில் இருந்து இறங்கி நடந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தோசை சுடுவது, பூரி சுடுவது என தினம் தினம் புதுப்புது பரப்புரை உத்திகளை கையாண்டு வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

அமமுக வேட்பாளர் முத்துசாமியும் தனது படைகளுடன் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். ஓ.பி.எஸ், தங்க தமிழ்ச்செல்வன், முத்துச்சாமி ஆகிய மூவருமே அதிமுக என்ற ஒரே இயக்கத்தில் இருந்தவர்கள். நாம் தமிழர் சார்பில் பிரேம்சந்தர், மக்கள் நீதி மய்யம் சார்பில் கணேஷ்குமார் ஆகியோர் அவரவர் பாணியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.