டிரெண்டிங்

சாலையில் கிடந்த கொலுசு மூலப்பொருட்கள்.. பத்திரமாக ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு

சாலையில் கிடந்த கொலுசு மூலப்பொருட்கள்.. பத்திரமாக ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு

kaleelrahman

சாலையில் தவறவிடப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள கொலுசு தயாரிப்பதற்கான மூலப் பொருளை, நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை போலீசார் பாராட்டினார்கள்.


சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்தவர் சுபாஷ். யானைக்கவுனியில் வெள்ளி நகைகள் செய்யும் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இன்று தன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் யானைக்கவுனி, வால்டாக்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர் கையில் கொண்டு வந்த 4 கிலோ எடையுள்ள ரூ. 3 லட்சம் மதிப்பிலான வெள்ளி கொலுசு தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருளை தவறவிட்டு விட்டார். அதனை கண்டுபிடித்து தரும்படி யானைக்கவுனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

பூக்கடை உதவிக்கமிஷனர் பாலகிருஷ்ணபிரபு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெள்ளி பொருள் தவற விடப்பட்ட வால்டாக்ஸ் சாலையில் அதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து தவறவிட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் தனது கையால் அந்த பையை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இந்நிலையில் தவறவிடப்பட்ட வெள்ளி பொருள் அடங்கிய பையை எடுத்த மூலக்கடையைச் சேர்ந்த ஆதிலால் அந்த பைக்குள் இருந்த மருத்துவர் சீட்டில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வெள்ளி பொருட்கள் சாலையில் விழுந்து கிடந்த விவரத்தை கூறியுள்ளார்.


அது தொடர்பாக யானைக்கவுனி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பையை கண்டெடுத்த ஆதிலால் யானைகவுனி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து அந்த வெள்ளி பொருட்களை நேர்மையுடன் ஒப்படைத்தார். காணாமல் போன வெள்ளிப்பொருட்கள் அடங்கிய பை கிடைத்து விட்டதாக தகவல் அளித்த யானைக்கவுனி போலீசார் சுபாஷை நேரில் வரவழைத்து பத்திரமாக ஒப்டைத்தனர். ஆதிலாலின் இந்த நேர்மையான செயலை பாராட்டிய யானைக்கவுனி போலீசார் அவருக்கு சந்தன மாலை போட்டு கவுரவித்தார்கள். விலையுயர்ந்த பொருள் ரோட்டில் கிடந்தால் அதனை தங்களுக்கே சொந்தமாக்கிக் கொள்ளும் இந்த காலத்தில் ஆதிலாலின் நேர்மை காவல்துறையினர் மற்றும் பொது மக்களை பாராட்ட வைத்துள்ளது.