டிரெண்டிங்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 270 மானிய விலை உர மூட்டைகள் !

kaleelrahman

பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையம் பிரிவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகளை குடோனில் பதுக்கி வைத்து லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 270 உர மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும் உர மூட்டைகளை பதுக்கி வைத்து லாரி மூலமாக கடத்துவதாக சார் ஆட்சியர் வைத்தியநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.


இதையடுத்து அங்கு விரைந்து வந்த வைத்தியநாதன் மற்றும் வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையிலான அதிகாரிகள் குடோனை ஆய்வு செய்தனர். அப்போது ஸ்பிக் யூரியா, குரோமர் யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததும் அவைகளை லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.


இதனை அடுத்து அங்கிருந்த 270 மூட்டைகளை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் வேளாண் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். லாரி ஓட்டுநர் கருப்பசாமியிடம் விசாரித்தபோது சோமனூர் பகுதியிலிருந்து உர மூட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து கேரளாவிற்கு கடத்த முற்பட்டதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கேரளாவிற்கு கடத்தி சென்று பல மடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.


பின்னர் உர மூட்டைகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்து குடோன் உரிமையாளர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.