பீகாரில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில், மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி மற்றும் 4 அமைச்சர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றது. முதல்கட்டமாக 71 இடங்களில் கடந்த 28ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், நாளை இரண்டாம் கட்டமாக 94 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு 41 ஆயிரத்து 362 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிக்க இரண்டு கோடியே 85 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இரண்டாம் கட்டத் தேர்தலில், சுமார் ஆயிரத்து 500 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இவர்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி குறிப்பிடத்தக்கவர் ஆவார். வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரகோபுர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர், பாரதிய ஜனதா வேட்பாளர் சதிஷ் குமாரிடமிருந்து கடும் சவாலை எதிர்கொண்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில், தேஜஸ்வியின் தாயாரும் முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவியை தோற்கடித்த சதிஷ் குமார், இம்முறையும் அதேபோன்றதொரு அதிர்ச்சி வைத்தியத்தை தேஜஸ்விக்கு தருவார் என பாரதிய ஜனதா நம்புகின்றது. ஆனால், வேலைவாய்ப்பின்மை, கொரோனா பொதுமுடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் போன்றவற்றில் நிதிஷ் குமாருக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்து தொகுதியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறார் தேஜஸ்வி.
இதுதவிர, முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதாவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தவருமான சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்கா போட்டியிடும் பங்கிபுர் தொகுதியும் அனைவரின் கவனைத்தையும் ஈர்த்துள்ளது. இவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் களம் கண்டுள்ள நிதின் நபின், பல முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர்கள் தவிர தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நான்கு பேரும் இரண்டாம் கட்டத் தேர்தல் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இவை தவிர்த்து, தலைநகர் பாட்னாவில் உள்ள நான்கு தொகுதிகளும் தேர்தலை சந்திக்கின்றன. இவை அனைத்தும் தற்போது பாரதிய ஜனதா வசம் உள்ளன.