டிரெண்டிங்

“வன்முறை ஆட்சிக்கு எதிராகக் கிடைத்த வெற்றி” திரிபுரா மகிழ்ச்சியில் பிரதமர் மோடி

rajakannan

திரிபுராவில் கிடைத்தது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. திரிபுராவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேபோல், நாகாலாந்து மாநிலத்திலும் மீண்டும் கூட்டணி கட்சியுடன் ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் இழுபறி நிலையில் இருந்தாலும், பாஜகவும் ஏறுமுகம்தான். இந்நிலையில், மூன்று மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

அதில், “திரிபுரா தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. திரிபுரா சகோதர, சகோதரிகள் சாதித்துவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. திரிபுராவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள எந்த ஒன்றினையும் விட்டுவைக்க மாட்டோம். திரிபுராவில் கிடைத்தது கொள்கை ரீதியிலான வெற்றியும் கூட. மூர்க்கத்தனமான, வன்முறை ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. 

பாரதிய ஜனதா கட்சியின் நல்லாட்சிக்கும், கிழக்கு மாநில கொள்கை ஆகியவற்றிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வாக்களித்த மக்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி. மக்களின் தேவையகளையும், கனவுகளையும் நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து செயல்படுவோம். பாஜகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கு நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சி கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்” என்று மோடி கூறியுள்ளார்.