ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக 20 ரூபாய் நோட்டை டோக்கனாக வழங்கிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக, 20 ரூபாய் நோட்டில் வாக்காளர்களின் வரிசை எண்ணை எழுதி டோக்கனாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் விநியோகிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, நள்ளிரவு முதல் தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகரில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அதில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் வகையில் வரிசை எண் குறிப்பிட்டு வைக்கப்பட்டிருந்த 20 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இணை ஆணையர் சந்தேஷ்குமார் விசாரணை மேற்கொண்டார். வாக்குச்சாவடிகளில் வருபவர்களிடம் 20 ரூபாய் நோட்டுகள் உள்ளனவா, அவற்றில் குறியீடு ஏதேனும் உள்ளதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.