மதுரையில் 14 வயது சிறுமியிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் ஃபேஸ்புக் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் நத்ததம் பகுதியை சேர்ந்த முகமது சபின் என்ற இளைஞர் பழகி வந்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக ஃபேஸ்புக் மூலமாகவே சிறுமியும், இளைஞரும் பழகி வந்த நிலையில் நேரில் சந்திக்கும் அளவிற்கு பழக்கம் அதிகரித்துள்ளது. சிறுமியிடம் நேரில் சந்திக்க வருவதாக கூறி கடந்த 31ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு வந்த முகமது சபின், சிறுமியை தன்னுடன் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
பின்னர் ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியுடன் பொள்ளாச்சி, நத்தம், திண்டுக்கல், பழனி என பல இடங்களுக்கும் அவர் இருசக்கர வாகனத்திலேயே பயணித்துள்ளார். இறுதியில் திண்டுக்கலுக்கு சென்ற முகமது சபின், அங்கு உள்ள ஒரு தனியார் விடுதியில் விதிமுறைகளை மீறி அதிக பணத்தை கொடுத்து தங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட விடுதியும் எந்த ஆவணங்களும் வாங்காமல் சிறுமிக்கும், இளைஞருக்கும் அறையை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த இளைஞர் காதல், திருமணம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். புகாரின் அடிப்படையில் காவல்நிலைய ஆய்வாளர் மனோகரி தலையிலான குழுவினர் விசாரணையை தொடங்கினர்.
மாணவி பயன்படுத்திய செல்போனை சோதனை செய்ததில், இளைஞரின் தொலைபேசி எண்ணைக் கொண்டு சிக்னல் மூலமாக பின்தொடர்ந்த போலீசார் பொள்ளாச்சியில் சிறுமியை மீட்டு, இளைஞரை கைது செய்தனர். புகார் கொடுத்த இரண்டே நாளில் இளைஞரின் தொடர்பு எண்ணைக்கொண்டு மகளிர் காவல்நிலைய பெண் காவலர்கள் சிறுமியை மீட்ட சம்பவம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.