அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் தமது பெயர் இடம் பெறாததற்கு அமைச்சர் கே.சி.வீரமணியே காரணம் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் தமக்கு தொடர்பு இருப்பதாக சிலர் கூறுவதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கண்ணீர் மல்க கூறினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினராகவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் நிலோபர் கபில் தற்போது 2021 சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று முன்தினம் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அதன் பின்னர் இன்று சென்னையிலிருந்து வாணியம்பாடி திரும்பிய அமைச்சர் நிலோபர் கபில்க்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நிலோபர் கபில் கூறும்போது, "அம்மாவை பார்த்துதான் நான் கட்சியில் வந்தேன். அம்மாதான் எனக்கு எம்எல்ஏ பதவி தந்தார். அம்மாதான் எனக்கு அமைச்சர் பதவி தந்தார். அம்மாவுடைய மரியாதைக்காக, அம்மா என்னை கொண்டு வந்ததற்காக, யாரை வேட்பாளராக அறிவித்தாலும் பரவாயில்லை தலைமை கழகம் அறிவித்திருக்கிறது.
செந்தில்குமாருக்கு கண்டிப்பாக வேலை செய்து வெற்றி பெறச் செய்வேன். இது என்னுடைய கடமையாகும். எனக்கோ திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்காக இந்த வேலையை செய்து வருகிறார்கள். காலையில் இருந்து எனக்கு எத்தனை போன்கள் 10 கட்சிகள் மேல் என்னை அழைத்தார்கள், அனைத்து கட்சியுமே என்னை தொடர்புகொண்டு அழைத்தார்கள். அந்த தவறை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். அம்மா கட்சிக்காக விசுவாசமாக இருப்பேன். என்னுடைய அண்ணன் எடப்பாடியார், என்னுடைய அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு, இரட்டை இலைக்கு விசுவாசமாக இருப்பேன்" என்றார்.