டிரெண்டிங்

“நான் பாஜகவில் இல்லை..ஆனால் மோடியை பிடிக்கும்” - மதுரை சலூன் கடை மோகன்..!

webteam

மதுரையில் பொது முடக்கத்தில் ஏழைகளுக்கு உதவியதற்காகப் பிரதமரிடம் பாராட்டைப் பெற்ற சலூன் கடை உரிமையாளர் மோகன் தான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. ஆனால் மோடியைப் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்றைய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசும்போது மக்களின் அர்ப்பணிப்பு குறித்தும் பேசினார். அப்போது மதுரை மேலமடையைச் சேர்ந்த மோகன் என்ற முடிதிருத்தும் தொழில் செய்துவரும், சலூன் கடை உரிமையாளர் தனது மகளின் கல்வி செலவிற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கு நேரத்தில் ஏழைகளுக்கு உதவியுள்ளதாகவும், எனவே தான் அதற்குப் பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இவர் பாஜகவில் இணைந்ததாகவும், பாஜகவினர் பொன்னாடை போர்த்தி அவரை பாராட்டும் புகைப்படங்களும் வெளியாகின. இதுதொடர்பாக உண்மைத் தன்மையை அறிய சலூன் கடை உரிமையாளர் மோகனிடம் புதிய தலைமுறை சார்பில் பேசினோம். அப்போது பாஜகவில் இணைந்துவிட்டீர்களா ? என்ற கேள்விக்குத் தான் எந்தக் கட்சியிலும் இணையவில்லை என்று தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடியைப் பிடிக்கும் என்றார். அத்துடன் கட்சியில் இணைவது குறித்து தன்னால் இப்போது கூற முடியாது எனவும், இன்னும் ஒரு வாரத்திற்குப் பின்னர் தெரிவிப்பதாகவும் கூறினார்.