மூட நம்பிக்கை பற்றிப் பேசும் திமுகவின் தேர்தல் அறிக்கையில், புண்ணிய தலங்களுக்குச் செல்லும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வாக்குகளைப் பெறுவதற்குத்தான் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே கான்கிளேவ் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவரிடம், வரவிருக்கும் தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு வாய்ப்புள்ளது என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், ”பாரதிய ஜனதா வெற்றியடைய மிகப்பெரிய வாய்ப்பிருப்பதாக கூறினார். மக்கள் பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், பிரதமர் மோடியின் மேலும் பல திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.
கொரோனா காலத்தை பிரதமர் சிறப்பாக கையாண்டார் என்று பாராட்டிய நிர்மலா, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் தொழிற்துறையினருடன் தொடர்ந்து பேசி வந்ததை சுட்டிக்காட்டினார். அதேபோல் இந்திய மக்களும் கொரோனா காலக்கட்டத்தை கடக்க பெரிதும் உதவினர் என்றும் அமைச்சர் பாராட்டினார். அடுத்த முறை இந்தியா டுடே கான்கிளேவ் நிகழ்வில் தமிழில் முழுமையாகப் பேச அனுமதிக்க வேண்டும்” என நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தும் நிர்மலா சீதாராமன் விமர்சித்தார்.