80 சதவீத பாஜகவினர் கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை, ஜனாதிபதியாக்கவே விரும்பினர் என்று பாஜக எம்.பி, சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் இதை சத்ருகன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ’அத்வானி என் நண்பர், தத்துவஞானி, வழிகாட்டி, குரு, ஒப்பற்ற தலைவர். அவரை நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என்றே 80 சதவீத பாஜகவினர் விரும்பினர். ஆனால், அது போல் நடக்கவில்லை. பாஜகவில் இருந்து நான் விலகமாட்டான். இதுதான் எனது ஒரே கட்சி. முதல் மற்றும் கடைசி கட்சியும் இதுதான். வெறும் 2 எம்.பிக்கள் மட்டுமே இந்தக் கட்சிக்கு இருந்த போது நான் பாஜகவில் சேர்ந்தவன். நான் ஏன் இப்போது விலக வேண்டும்? கட்சியில் இருபெரும் சக்திகளாக இருப்பவர்கள் என்னை ஒதுக்கி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்திக்க முயன்றேன். ஆனால், அவர் எனக்கு நேரம் ஒதுக்கவில்லை. தேர்தலின் போது, பிரசாரத்துக்கு பிரதமரை அழைக்காத ஒரே வேட்பாளராக நான் தான் இருந்தேன். என் மகள், நடிகை சோனாக்ஷியை கூட எனக்காக பிரசாரம் செய்ய அழைக்கவில்லை. இருந்தாலும் நான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன்’ என்றார்.