உடல்நலக்குறைவு காரணமாக கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர், பதவியில் இருந்து விலக விரும்புவதாக பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கு தகவல் அனுப்பி உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் மனோகர் பாரிக்கர். கோவா முதலமைச்சராக உள்ளார். இவருக்கு வயது 62. கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கணைய அழற்சிக் காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தார். தற்போது மும்பை, கோவா ஆகிய இடங்களில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய சூழ்நிலையில், முதலமைச்சர் பதவியில் தான் தொடர்வது சரியாக இருக்காது என அவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இப்போதைக்கு பதவியில் தொடரும்படி மனோகர் பாரிக்கருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவருடைய இடத்துக்கு யாரை நியமிக்கலாம் என முடிவு செய்த பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கையில் பாஜக தலைமை ஈடுபடும் என அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் சொல்கிறார்கள்.
மனோகர் பாரிக்கர், முன்பு நரேந்திர மோடி அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்து மீண்டும் கோவாவுக்கு முதல்வராக சென்றார். இப்போது உடல் நலக்குறைவு காரணமாக முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.