டிரெண்டிங்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: நிதிஷ் கட்சி எதிர்ப்பு, கெஜ்ரிவால் ஆதரவு

rajakannan

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு சில கட்சிகள் ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் கே.சி.தியாகி கூறிய போது, “ஜே.பி.நாராயண், ராம் மோகன்ஹர் லோஹியா மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் மரபினை எங்களது முதல்வர் நிதிஷ்குமார் முன்னெடுத்து செல்வார். எங்களது கட்சி இந்த மசோதாவை எதிர்க்கிறது. எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டிருக்க கூடாது என விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

அதேபோல், முதல்வர் நவீன் பட்நயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் எம்பி பிரசன்னா ஆச்சார்யா கூறிய போது, “இன்றைய நிலவரப்படி ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக ஆகியுள்ளது. இந்த முடிவை எனது கட்சி ஆதரிக்கிறது. நாங்கள் மாநில கட்சியாக இருந்தாலும், நாடு முதலில் முக்கியம்” என்றார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் இந்த முடிவை ஆதரித்துள்ளார். இந்த முடிவு ஜம்மு-காஷ்மீரில் அமைதியையும், வளர்ச்சியையும் கொண்டு வரும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.