டிரெண்டிங்

மதுரையில் வாக்காளர்கள் விவரங்கள் மட்டுமே எடுக்கப்பட்டது- விசாரணையில் தகவல்

மதுரையில் வாக்காளர்கள் விவரங்கள் மட்டுமே எடுக்கப்பட்டது- விசாரணையில் தகவல்

Rasus

மதுரை மக்களவை தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன. இதனிடையே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மதுரை வாக்குப்பதிவு மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமல் குறைபாடு இருந்ததை கூடுதல்  தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக அவர் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், “ முறைகேடாக 17 ஏ படிவம் மட்டும் எடுக்கப்பட்டு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையில் அதில் நகல் எடுக்கப்பட்டிருக்கிறது. 17ஏ படிவத்தில் வாக்காளர்கள் விவரம், அவர்களின் கையொப்பங்கள் இடம்பெற்றிருக்கும். அதேசமயம் முன்னதாக கருதிய 17சி படிவத்தின் முக்கிய ஆவணங்களை யாரும் எடுக்கவில்லை.

மதுரை மேற்கு தொகுதி தேர்தல் உதவி அலுவலரான குருசந்திரன் அறிவுறுத்தலின் பேரில்தான் 4 பேரும் அந்த அறைக்குள் நுழைந்துள்ளனர். அதேமசயம் குருச்சந்திரன் மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளரான ராஜசேகரின் அறிவுறுத்தலால் அந்த 4பேரையும் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்துள்ளது. அங்கு போலீசார் போதிய பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் இருந்துள்ளனர். அத்துடன் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை 6 ஸ்டோரேஜ் அறைகள் மூடப்படாமல் இருந்ததுள்ளது. போலீசாரும் ஸ்டோரேஜ் அறையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் இல்லாமல் இருந்துள்ளனர்.

அதேமசயம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த 6 ஸ்டாரங் ரூமில் யாரும் நுழையவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் மாவட்ட தேர்தல் அலுவலரான நடராஜன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கடந்த 19-ஆம் தேதிக்கு பின் சென்று பார்க்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையம் விதிகளின்படி, வாக்கு எண்ணிக்கை மையமானது மாவட்ட தலைமையிடத்தில் இருந்தால் தேர்தல் அலுவலர் நாள் ஒன்றிற்கு இரண்டு முறை சென்று பார்க்க வேண்டும். ஆனால் மாவட்ட தேர்தல் அலுவலரான நடராஜன் வாக்கு எண்ணிக்கை மையத்தை சென்று பார்க்கவில்லை. அத்துடன் வாக்கு எண்ணிக்கை மையத்தின் இரண்டாவது மாடி வரை ஆட்கள் எந்தவித பரிசோதனைக்கும் உட்படுத்தாமலும், ஐடி கார்டு அணியாமலும் சென்றது தெரியவந்துள்ளது.” என தெரிவித்தார்.