zerodha என்ற நிதிச்சேவை நிறுவனமொன்று, தனது x தளப்பதிவில் ‘புதிய நிதி மோசடி’ குறித்து மக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் பகிர்ந்த வீடியோவில், ‘மோசடி செய்பவர்கள் மக்களை எவ்வாறு அணுகுகிறார்கள்’ என்பதும், அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, அக்காணொளியில் இளைஞர் ஒருவர் அவரச அழைப்புக்காக சாலையோரங்களில் சிலரிடம் தொலைபேசிகளைக் கடனாகக் கேட்கிறார். அதில் ஒரு முதியவர், ‘ஒரே ஒரு கால் செய்வதற்குதானே கேட்கிறார்...’ என்று கருணையுடன் தனது போனை அந்த நபருக்கு கொடுக்கிறார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் போனின் உரிமையாளரின் வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப்பணமும் எடுக்கப்பட்டுவதை அந்த காணொளி காட்சிப்படுத்துகிறது.
ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடியில் பலர் தொடர்ந்து தங்களது பணத்தை இழந்தபடி இருக்கிறார்கள். இது குறித்து அரசாங்கமும் தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பல்வேறு விழிப்புணர்வை தொடர்ந்து வெளியிட்டாலும், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மக்களிடையே ஆன்லைன் பரிவர்த்தனையில் போதுமான விழிப்புணர்வு இல்லாததே இத்தகைய குற்றங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.
மோசடி பேர்வழிகள் பலபல புதிய வழிமுறைகளில் மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்த பணத்தை பறிப்பதை நோக்கமாக கொண்டுள்ளனர். சைபர் கிரைம் மூலமாக, வங்கி கணக்குகள் மூலமாக என பலவழிகளில் பொதுமக்களை அச்சுறுத்தியும், ஏமாற்றியும் அவர்களின் பணத்தை மொத்தமாக சுருட்டி விடுகின்றனர். பணத்தை பரிகொடுத்தவர்கள் சுதாரித்துக்கொள்வதற்கு முன்னதாக பணத்தை பல்வேறு கணக்குகளில் டெபாஸிட் செய்து அவற்றை திரும்பப்பெற முடியாதபடி செய்து விடுகின்றனர்.
இந்நிலையில் zerodha பகிர்ந்துள்ள இந்த வீடியோ, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஏமாற்றுக்காரர்களிடம் காப்பாற்றும் வகையில் அமைந்துள்ளது.
எப்படி ஏமாற்றுகிறார்கள்
பொதுவெளிகளில் சந்திக்கும் மக்களிடையே மோசடி பேர்வழிகள், தங்களின் பச்சாதாபத்தை காட்டி அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பதை புதிய முயற்சியாக அரங்கேற்றி வருகின்றனர். உதாரணத்துக்கு, ‘அவசரமாக நண்பணுக்கு, அல்லது உறவினர்களுக்கு கால் செய்யவேண்டும், எனது போனில் பேலன்ஸ் இல்லை’ என்று கூறி, சைபர் குற்றங்கள் பற்றிய அறியாதவர்களிடம் ஃபோனை வாங்கி உறவினர்களுக்கு பேசுவது போன்று அனைத்து தகவல்களையும் தங்கள் கூட்டாளிக்கு அனுப்பிவிடுகின்றனர்.
அந்த கூட்டாளி அந்த ஃபோனுக்குரிய நபரின் வங்கிக்கணக்கிலிருந்த மொத்த பணத்தையும் உடனடியாக பல்வேறு கணக்குகளில் மாற்றிவிடுகிறார். இத்தகைய குற்றம் சமீபத்தில் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கையாக மக்கள் செய்ய வேண்டியது என சில விஷயங்களை Zerodha பகிர்ந்துள்ளது. அவை:
யாராவது ஃபோன் இரவல் கேட்டால் பொதுமக்கள் கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
ஒருவேளை கொடுத்தாலும், அவர்கள் சொல்லும் எண்ணிற்கு நீங்களே ஃபோன்-கால் செய்து ஸ்பீக்கரில் போட்டு பேச சொல்லுங்கள்.
எந்தச் சூழலிலும் உங்கள் ஓடிபி எண்ணை யாருடனும் பகிரக்கூடாது.
இதன்மூலம், ஏமாற்று பேர்வழிகளிலிடமிருந்து தப்பிக்கலாம்.