ai, youtube x page
டெக்

யூடியூபின் புதிய விதி.. கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு சிக்கல்!

Mass produced, inauthentic உள்ளடக்கங்களை அடையாளம் காண யூடியூப் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

PT WEB

ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பெரும் எண்ணிக்கையில் வீடியோக்களை உருவாக்கி அவற்றை யூடியூப்பில் பதிவிட்டு வருவாய் ஈட்டும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகையப் போக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் யூடியூப் அதன் மானிடைசேஷன் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, ஏஐ மூலம் உருவாக்கப்படும் வீடியோக்கள், மற்றவர்களின் உள்ளடக்கங்களை நகலெடுத்து குறைந்த முயற்சியுடன் மறு உருவாக்கம் செய்யப்படும் வீடியோக்கள், மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் வீடியோக்களைப் பதிவிடுபவர்களுக்கு பணம் வழங்கப்படாது. Mass produced, inauthentic உள்ளடக்கங்களை அடையாளம் காண யூடியூப் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

youtube

இதன் தொடர்ச்சியாக, வைரல் வீடியோக்களின் முக்கிய பகுதிகளை கத்தரித்து, வாய்ஸ்-ஓவர் கமெண்ட்ஸ் சேர்த்து பதிவிடும் போக்கும் கட்டுப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. யூடியூப், உலகளவில் லட்சக்கணக்கான கிரியேட்டர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், வருவாய் ஈட்டவும் முக்கிய தளமாக விளங்குகிறது. யூடியூப் பார்ட்னர் புரோகிராம் மூலம், 1000 சப்ஸ்கிரைபர்களையும், 4,000 மணிநேர பார்வையை தாண்டிய கிரியேட்டர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. 2021 முதல் 2023 வரை, கிரியேட்டர்கள், கலைஞர்கள் மற்றும் மீடியா நிறுவனங்களுக்கு 70 பில்லியன் டாலர்களுக்கு மேல், இந்திய மதிப்பில் 5.8 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது, இது மற்ற எந்த தளத்தையும் விட அதிகம். 2024-ல், யூடியூப் 36.1 பில்லியன் டாலர் விளம்பர வருவாய் ஈட்டியது. இதில் 55% கிரியேட்டர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஒரிஜினல் உள்ளடக்கங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவம் வகையில் புதிய விதியை யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், இனி யூடியூப் மூலம் வருவாய் ஈட்ட வேண்டுமென்றால் தரமான உள்ளடக்களைக்கொண்டு ஒரிஜினல் வீடியோக்களை உருவாக்குவது அவசியம்.