டெக்

ஒரு மணி நேரத்தில் முடங்கியது யூடியூப் மட்டும் இல்லை !

ஒரு மணி நேரத்தில் முடங்கியது யூடியூப் மட்டும் இல்லை !

இப்போதெல்லாம் யூடியூப்தான் எல்லாம். நேற்று ரிலீஸ் ஆன சந்தோஷ் நாராயணன் பாட்டு முதல் அந்தக் கால தியாகராஜ பாகவதரின் பாட்டு முதல் எல்லாம் கிடைக்கும் ஒரே இடம் யூடியூப். பாட்டு மட்டுமல்லாமல் சமையல் குறிப்பு முதல் ஆப்பிரிக்க நாட்டின் காண்டா மிருகும் வரை தெரிந்துக்கொள்ளலாம். பலருக்கு யூடியூப் பொழுதுபோக்கு, இன்னும் சிலருக்கு யூடியூப் வருவாய் தரும் சேவை.

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு யூடியூப் ஒரு வரப்பிரசாதம், அதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அப்படிப்பட்ட தளம் இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது. இதனால் யூடியூப்பை பயன்படுத்தும் தனி நபர் முதல் அதில் சானல்களை தொடங்கி வருவாய் ஈட்டும் பலரும் அதிர்ச்சியடைந்தனர். சிலருக்கு காலையில் கண் விழித்ததுடன், யூடியூப்பில்தான் அடுத்த வேலையை தொடங்குவார்கள். அவர்கள் எல்லாம் சுமார் 1 மணி நேரம் முடங்கிபோயினர்.

இதனையடுத்து பலரும் யூடியூப் நிறுவனத்துக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து யூ டியூப் நிறுவனம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தது. அதில், “யூ டியூப் சரியாக இயங்கவில்லை என நீங்கள் தந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. யூடியூப் டிவி ,யூ டியூப் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சரிசெய்த பின்பு தகவல் தெரிவிக்கப்படும். இடையூறு ஏற்பட்டுள்ளதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம்" என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் யூ டியூப் இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனால் அதனை பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் நிம்மதி பெருமூச்சு விட்டு, தங்களது அன்றாட பணியை தொடங்கினர்.

அக்டோபர் 17 ஆம் தேதி காலை உலக யூடியூப் ஆர்வலர்கள் பரபரப்புக்குள்ளாக்கிய இந்தத் தளம் எப்போது தொடங்கப்பட்டது என்று தெரிந்துக்கொள்ளலாம். யூடியூப் நிறுவனம் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பேபால் நிறுவனத்தில் பணிபுரிந்த சாட் ஹர்லி , ஸ்டீவ் சென் , ஜாவேத் கரீம் ஆகிய மூன்று பேர் இணைந்து இந்த இணையதளத்தைத் தொடங்கினர். சாட் ஹர்லி பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் படித்தவர் . ஸ்டீவ் கரீம் மற்றும் ஜாவேத் கரீம் இருவரும் இல்லினோயஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். நவம்பர் 2005 ற்கும் எப்ரல் 2006 ற்கும் இடையே 11.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஸீகியோயியா கேபிடல் நிறுவனம் இதில் முதலீடு செய்தது.

'மி அட் ஸூ' என்ற காணொளியே இதில் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி. ஜாவேத் கரீம் 2005 ஆம் ஆண்டு , ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி இரவு 08:27 ற்கு பதிவேற்றம் செய்தார். இதனை கூகுள் நிறுவனம் 2006 இல் அக்டோபர் மாதம் வாங்கியது. இதன் பின்புதான் யூடியூப் பல்வேறு வளரச்சிகளை பெற்று தன்னை புதுப்பித்துக்கொண்டது. இந்தத் தளம் வந்த பின்புதான் பல திறமையானர்கள், இப்போதும் தினமும் உலகுக்கு அறிமுகமாகிக் கொண்டே வருகிறார்கள். அதனால்தான் ஒரு மணி நேர யூடியூப் முடக்கம் பலரையும் திக்குமுக்காட வைத்தது.