டெக்

”அமலாக்க அதிகாரிகள் எங்கள் நிறுவன உயரதிகாரிகளை மிரட்டினர்” - ஸியோமி பகிரங்க குற்றச்சாட்டு!

ச. முத்துகிருஷ்ணன்

சட்ட விரோத பணப்பரிவர்த்த்னையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஸியோமி நிறுவனம், அரசு அதிகாரிகள் தங்களுக்கு ஏற்றபடி அறிக்கை அளிக்கவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என உயரதிகாரிகள் மிரட்டப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவின் பிரபல மொபைல் விற்பனையாளரான “ஸியோமி” நிறுவனம் பிப்ரவரி மாதம் முதல் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த வாரம் ஸியோமி நிறுவனத்தின் இந்திய வங்கிக் கணக்குகளில் ரூ.5,551 கோடி ரூபாயை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை. இது வெளிநாடுகளுக்கு “ராயல்டி” என்ற பேரில் சட்டவிரோதமாக பணம் அனுப்பியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

ஆனால் ஸியோமி நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளது. ராயல்டியாக அனுப்பப்பட்ட பணம் அனைத்தும் முறையானவை என்று கூறியது. வியாழன் அன்று, ஸியோமி தரப்பின் வாதங்களைக் கேட்டு, வங்கி சொத்துக்களை முடக்கும் அமலாக்கத்துறையின் முடிவை நிறுத்தி வைத்து கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த விசாரணை மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் தங்கள் நிறுவனத்தின் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குனர் குமார் ஜெயின், தற்போதைய தலைமை நிதி அதிகாரி சமீர் பி.எஸ். ராவ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக குற்றம் சாட்டியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாடிகள் விரும்பியபடி அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால் "மோசமான விளைவுகள்" சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியதாக் அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

ஸியோமியின் இந்த் பகிரங்க குற்றச்சாட்டுக்கு அமலாக்கத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை.