டெக்

இனப்பெருக்கம் செய்யும் உலகின் முதல் உயிர் வாழும் ரோபோ ‘Xenobot’! மிரள வைக்கும் புதிய தகவல்

EllusamyKarthik

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் ஸ்மார்ட் ஆகிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது ரோபோக்களும் ஸ்மார்ட்டாகி வருகின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறது ‘Xenobot’ என்ற ரோபோ. இதனை இனப்பெருக்கம் செய்யும் உலகின் முதல் உயிர் வாழும் ரோபோ எனச் சொல்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த ரோபோக்கள் அப்படி என்ன மேஜிக் செய்கிறது என்பதை பார்ப்போம். 

வழக்கமாக ரோபோக்கள் என்றால் புரோகிராம் செய்யப்பட்ட சில டாஸ்க்குகளை துல்லியமாக செய்யும். மலையாள மொழி திரைப்படமான ஆண்டராய்டு குஞ்சப்பன் படத்தில் வருவதை போல மூத்த குடிமக்களுக்கு உதவும் ரோபோக்கள் குறித்து கூட கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதையெல்லாம் விஞ்சும் அளவுக்கு இனப்பெருக்கம் செய்து அசத்துகின்றன இந்த ‘Xenobot’ ரோபோக்கள். 

Xenobot கதை?

சாம் க்ரீக்மேன், டக்ளஸ் பிளாக்கிஸ்டன், மைக்கேல் லெவின், ஜோஷ் பொங்கார்ட் என நான்கு விஞ்ஞானிகள் இணைந்து இந்த ரோபோவுக்கு உயிர் கொடுத்துள்ளனர். 

இதற்காக Xenopus laevis என்ற ஆப்பிரிக்க தவளையின் ஸ்டெம் செல்களை கொண்டு இதற்கு உயிர் கொடுத்துள்ளனர். அதன் நினைவாக தான் இதற்கு Xenobot என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1 மில்லி மீட்டருக்கும் கீழான அளவில் இருக்கும் இந்த ரோபோக்கள் அருகாமையில் உள்ள செல்களை சேகரித்து தனக்கு தானே இனப்பெருக்கம் செய்து கொள்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முழுவதும் தோல் மற்றும் இதய தசை செல்களை மட்டுமே இவை கொண்டுள்ளன. டிரையல் அண்ட் எர்ரர் முறையில் நடக்க, நீந்த, துகள்களை தள்ள, பளு தூக்க என தனியாகவும், குழுவாகவும் இணைந்து பணியாற்றும் டாஸ்க்குகள் இதற்கு கொடுக்கப்பட்டுள்ளனவாம். உணவு இல்லாமல் ஒரு வார காலம் வரை உயிர் வாழுமாம் இந்த ரோபோக்கள். 

இப்போதைக்கு இது அறிவியல் ரீதியிலான சோதனையில் உள்ளதாம். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் அடிப்படையில் இந்த மைக்ரோ ரோபோக்கள் மருத்துவ துறையில் முக்கியமான பணிகளை செய்ய உதவும் என சொல்லப்படுகிறது. 

இது ரோபோ தானா? இல்லை உயிரினமா? என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. ஆனால் இது ரெண்டுமே இல்லை என சில விஞ்ஞானிகள் சொல்லி வருவதாக தகவல்.