டிசம்பர் 31, 2019ல் இருந்து விண்டோஸ் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. அவ்வப்போது பயனாளர்களுக்கு ஏற்ப அப்டேட்ஸ் கொடுத்து வருகிறது. தங்களது அப்டேட்ஸூக்கு ஏற்ப செயல்திறன் இல்லாத செல்போன்களில் இருந்து வாட்ஸ் அப் தனது சேவையை அவ்வப்போது நீக்கியும் வருகிறது.
அதன்படி 2019, டிசம்பர் 31ல் இருந்து விண்டோஸ் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் விண்டோஸ் போனில் வேறு அப்டேட்ஸ் விடும் திட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து விண்டோஸ் போன்களில் வாட்ஸ் அப் தனது சேவையை நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
ஆண்ட்ராய்ட் வெர்சன் 2.3.7 அல்லது அதற்கும் கீழான மாடல்களிலும், iOS 7 மற்றும் அதற்கு கீழான மாடல்களிலும் பிப்ரவரி 1, 2020 முதல் வாட்ஸ்அப் இயங்காது என ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது விண்டோஸ் போன்கள் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது.
பிளாக்பெர்ரி ஓஎஸ், பிளாக்பெர்ரி 10 மற்றும் விண்டோஸ் ஃபோன் 8.0 வெர்ஷன் அதற்கும் கீழுள்ள மாடல்களுக்கு கடந்த வருடமே வாட்ஸ் அப் தனது சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.