டெக்

வாட்ஸ்ஆப் புதிய கொள்கை அனுமதி விவகாரம்: என்னென்ன சிக்கல் வரும் தெரியுமா?

webteam

வாட்ஸ்ஆப்பின் புதியக் கொள்கைகளுக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால் நிறுவனம் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

வாட்ஸ்ஆப் நிறுவனம் புதிதாக வகுத்துள்ள புதிய கொள்கைகளுக்கு அதன் பயனாளர்கள் சம்மதம் தெரிவிக்க, இன்றைய தினத்தை இறுதிதினமாக அறிவித்து இருந்தது. அதன்படி புதிய கொள்கைகளுக்கு சம்மதம் தெரிவிக்காத பயனாளர்களின் வாட்ஸ்ஆப்,  முன்புபோல் இல்லாமல் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளுக்குள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்களின் சாட்ஸ் லிஸ்ட், அறிவிப்புகள் மற்றும் அழைப்புகளின் செயல்பாடுகளில் அவ்வப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். 

இது குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “சில வாரங்களுக்குப்பிறகு உங்களுக்கு வரும் அழைப்புகளையும், அறிவிப்புகளை அணுக முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும் வாட்ஸ்ஆப் நீங்கள் அனுப்பும் செய்திகளையும், அழைப்புகளையும் நிறுத்தும். அந்த தருணத்தில் நீங்கள் வாட்ஸ்ஆப்பின் புதிய கொள்கைகளை அனுமதித்து வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டும். இல்லை வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” இவ்வாறு அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் நோட்டிபிக்கேஷன் பட்டனை ஆன் செய்து வைத்திருக்கு பயனாளர்கள், பிறரிடம் இருந்து வரும் செய்திகளையும் நோட்டிபிக்கேஷனில் காண இயலும். தற்போதைக்கு அங்கிருந்து பதிலளிக்க முடியும்.

முன்னதாக, வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பிரைவஸி பாலிசியை மாற்றுவதாக அறிவித்திருந்தது. அதன்படி வாட்ஸ்ஆப் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அதன் சக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒப்புதல் அளிக்காத பயனர்கள் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதியோடு வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தது.

வாட்ஸ்ஆப்பின் இந்த முடிவு சர்ச்சையான நிலையில் பயனாளர்கள் வாட்ஸ் ஆப்பை விடுத்து சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்திய அரசும் பிரைவஸி பாலிசியில் மேற்கொண்டுள்ள மாற்றங்களை கைவிடுமாறு வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வில் காத்கார்ட்டுக்கு கடிதம் எழுதியது. அது தொடர்பாக 14 கேள்விகள் கேட்கப்பட்டன.வாட்ஸ்ஆப் புதிய கொள்கைகளுக்கு சம்மதம் தெரிவிக்காத பயனர்களின் கணக்குகள் நீக்கப்படாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.