இந்தியாவில் டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனையில் முக்கிய இடத்தை பிடிக்க வாட்ஸ் அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற வாட்ஸ் அப் செயலில், பணப்பரிமாற்றம் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதி அனைத்து வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. முதலில் சோதனைக் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட வாட்ஸ் அப் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணப்பரிமாற்றம் தற்போது மத்திய அரசின் யு.பி.ஐ சேவையின் மூலம் சோதனை முறையில் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வாட்ஸ் அப் ஐஎஸ்ஓ 2.18.21 மற்றும் ஆண்டாராய்டு பீட்டா 2.18.41 என்ற பரிமாற்ற பதிப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியில் செட்டிங்க்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்தால், அதில் வரும் ஆப்ஷன்களில் ஒன்றாக பணப் பரிமாற்றமும் இடம்பெறவுள்ளது. அதன்மூலம் பணத்தை எளிதில் அனுப்ப முடியும்.
ஆக்ஸிஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஸ்டேட் பேங்க், எஸ் பேங்க், ஆந்திரா பேங்க் உள்ளிட்ட பல வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இதன்மூலம் பயன்பெற முடியும். சோதனைக்கு பின் இது அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றார்கள். எனவே இந்தியாவில் தற்போதுள்ள டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அப்களை எல்லாம் விட, ஒரு முக்கிய இடத்தை பிடிக்க வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. எனவே பணப்பரிமாற்றத்தில் முறைகேடுகள் நடைபெறாத வகையில், பாதுகாப்புடன் ஆப்பை தயாரித்து வருகிறது.